Sunday, 31 July 2016

கபாலி
கபாலி - வழக்கமான ரஜினி ஃபார்முலாவை விட்டு விலகி, ரஜினி தனது திரையுலக வாழ்க்கையில் “ரிஸ்க்” எடுத்து நடித்துள்ள படம். அதுவும் லிங்கா களேபரங்களுக்குப் பின்னர் தனது நிஜ வயதையொட்டிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது, பா.ரஞ்சித்தை இயக்குனராக தேர்ந்தெடுத்தது என மிகப் பெரிய ஆச்சர்யங்களை வழங்கினார்.


21/07 அன்று நான் இந்தப் படத்தினைப் பார்த்தது Vlaardingen,  Netherlandsல்.
ஆம்ஸ்டர்டாமில் இருந்து கிட்டத்தட்ட 1.5 மணி நேரம் ரயிலில் சென்று வந்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. பல தமிழ் முகங்கள் தியேட்டரை நோக்கி... பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

வழக்கம் போல “த்த்த்த்தலைவ்வ்வ்வ்வா” என்று சந்தோஷமாக ஆர்ப்பாட்டத்துடன் படம் தொடங்கியது.மகிழ்ச்சி என்ற ஒரு வார்த்தையை எத்தனை விதமாக உச்சரிக்கிறார் மனுஷன்!படத் தொடக்கத்தில் இருந்த ஆராவாரம் அடங்கி அனைவரும் படத்தினில் ஆழ்ந்தனர். ரஜினி ரசிகர்கள் பலருக்கும் அன்று வேறுவிதமான அனுபவம். அதுவும் குமுதவள்ளியைத் தேடி.. தேடிச் செல்லும் போது கபாலி வழக்கமான ரஜினி படம் அல்ல என்பது தெரிந்தது.

படம் முடிந்து வெளியே வரும் போது சிலருக்கு படம் பிடிக்கவில்லை. என் அருகில் இருந்த சென்னையைச் சேர்ந்தவர் “ரஞ்சித் தலைவரை சரியாக உபயோகிக்கவில்லை, சார்” என்று கூறினார். [ இதுதான் முதல் நாள் படம் பார்த்த பல ரசிகர்களின் எண்ணம்]. அவரிடம் நான் சொன்னது.. மற்றும் whatsAppல் சில நண்பர்களிடம் சொன்னது...  கடைசி வரியில்.


 எனக்கு படம் பிடித்திருந்தது.. இருந்தாலும் சில காட்சிகளை ட்ரிம் செய்திருக்கலாமோ எனத் தோன்றியது.


அடுத்தநாள் ஊருக்கு வந்த பின்னர்... 2ம் முறை பார்த்தேன். எந்தெந்தக் காட்சிகளையெல்லாம் ட்ரிம் செய்திருக்கலாமென நினைத்தேனொ... அந்தக் காட்சிகள் அத்தனையும் படத்தின் பலம். பா.ரஞ்சித் ரஜினியை மிக அற்புதமாக உபயோகப்படுத்தியுள்ளதையும் உணர்ந்ந்தேன்!

அடுத்த நாள்.. மீண்டும் 3ம் முறை கபாலி. ஒவ்வொரு முறையும் பார்க்கப் பார்க்க.. படத்தின் தாக்கமும், ரஜினியின் நடிப்பும் உள்ளே ஆழமாக பாதித்தது. தலைவர் படம் பார்த்து கண்கலங்கியது என்றால்.... அது கபாலி மட்டுமே!

2 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை... இதுவரை 4 முறை பார்த்தாகிவிட்டது.

படம் - க்ளாஸ் & மாஸ்.

ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் நடிப்பு அற்புதம். ஓவர் ஆக்டிங் இல்லாமல், முக்கி முனகாமல்... சிறு  அசைவுகளாலேயே நடிப்பினை வெளிப்படுத்தும் பாங்கு.... ஹேட்ஸ் ஆஃப் தலைவா!. ரஜினியின் நடிப்பு என்று தொடங்கினாலே... சிலர் ஏளனமாகவே பார்ப்பார்கள். இதெல்லாம் என்ன நடிப்பு என்று சொல்பவர்களுக்கு கமல் போன்ற நடிகர்கள் செய்யும் ஓவர் நடிப்பு மட்டுமே தெரியும். கமலை விட தேர்ந்த அளவான நடிப்பினை வழங்க ரஜினியால் (மட்டுமே )முடியும். ஒரு வட்ட்த்திற்குள் சிக்கியுள்ளோம் .. வெளியே வர முடியாது என்ற அவநம்பிக்கையில் இத்தனை நாட்கள் இருந்துள்ளார்.
90களில் சூப்பர் ஹீரோ ரஜினி படங்களைப் பார்க்கத் தொடங்கியவர்களுக்கு ரஜினி என்ற நடிகனை அடையாளம் காட்டிய படம் கபாலி
 1. ஜெயிலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் குமுதவள்ளியின் நினைவினால் ஒவ்வொரு அறையாக செல்லும் போது.. மாறும் முகபாவம்.
 2. அது நிஜமல்ல என்ற உண்மை உணர்ந்து ஆயாசமாக பெருமூச்சு விடுவது..
 3. நல்லா சாப்பிடுங்க மார்த்தாண்டம், அட ஏன் எந்திரிச்சுட்டீங்க..... நாம நல்லாத்தான் இருப்போம் என்று சொல்வதெல்லாம் புது ரஜினி ஸ்டைல் நக்கல்
 4. லோகா.. தனது மனைவியைப் பற்றி கீழ்த்தரமான எண்ணத்தில் சொல்லும் போது ஒரு அங்குலம் கூட நகராமல்.. நின்ற இடத்திலிருந்தே சிக்ஸர் அடித்தது போல "மகிழ்ச்சி" என்ற ஒற்றைச் சொல்லில் தனது கோபத்தினை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி... அலுக்காது
 5. வீரசேகரன் பூஜை போட்டுட்டாண்னே என அமீர் சொல்லும் போது.. அதைக் குறித்து சிறிதும் கவனிக்காமல் “  எனக்கு என்னவோ யோசனையாவே இருக்கு, அமீர்” என்று குழப்ப மனநிலையில் சொல்லும் போதும்...
 6. அந்த பொண்ணு என்ன அப்பானு சொல்லுச்சுல்ல...
 7. Free Life Schoolல்  ஃப்ளாஷ் பேக் காட்சியை சொல்லும் போது லேசாக “மூக்கை உறிஞ்சுவது
 8. உங்களுக்கு உங்க மனைவின்னா அவ்வுளவு பிடிக்குமா? என்ற கேள்விக்கு கையை அகண்டு விரித்து முகத்தில் பிரகாசத்தினை காட்டும் காட்சி
 9. சிரிப்பு பற்றிய கவிதைக்கு "பிரமாதம்பா" என சொல்வது
 10. குமுதவள்ளி - பேரே ரொம்ப அழகா இருக்குல்ல... என்று சிறு குழந்தை போல சிரிப்புடன் சொல்வது
 11. அதனைத் தொடர்ந்து வெளியே வரும் போது மீனா .. கபாலியை நோக்கி திட்டும் போது... ரஜினி முகத்தில் வெளி கொண்டுவரும் உணர்ச்சிகள்...
 12. தாய்லாந்தில் நடக்கும் துப்பாக்கி சண்டையின் போது... யோகி தன்னை வாங்கப்பா போகலாம் எனும் போது.. "சட்" டென ( இந்த "சட்" எனும் வார்த்தையை  100 முறையேனும் அடிக்கோலிட்டுக் கொள்ளுங்கள்) முகம பிரகாசமடைந்து தன்னை மறந்து மகளின் கையைப் பற்றிக் கொண்டு அவள் பின்னால் செல்லும் போதும்..
 13. மகள்/ பெண் காப்ப்ற்றினாள் என்று சொல்வார்களே என்ற  பயம் துளியுமின்றி, சூப்பர்ஸ்டார் இமேஜை கடாசிவிட்டு, இயக்குனரின் நடிகனாக அற்புதமாக கதையின் ஓட்டத்திற்கு எவ்வுளவு தேவையோ அதற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகன்ய
 14. சங்கிலிமுருகனிடம் “அய்யா, ஃபோன் எடுத்திட்டாங்க.. பேசுங்க “ என்று படபடப்புடன் சொல்லும் போது
 15. யோகியிடம் “இங்கதான் எங்கேயோ பக்கத்துல இருக்கா... அவ என்னைப் பார்த்தா என்ன செய்வா, இப்ப என்ன நினைச்சுக்கிட்டுருப்பா.. இதெல்லாம் நினைக்கும் போது “திக்குதிக்குங்குது” என்று சொல்லிவிட்டு... மகளிடம் பேசுகிறோமே என்ற நியாபகம் வர “நீ போய்த் தூங்கு தூங்கு” என்று லைட்டாக வெட்கத்துடன்  சொல்லும் பொது
 16. குமுதவள்ளியைப் பார்க்கச் செல்லும் போது தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது
 17. சந்தித்த மகிழ்ச்சியில் பெருகி வரும் கண்ணீரை அடக்க முயன்று .. அதில் தோற்று... கம்பீரமாக மகளை அறிமுகப்படுத்தும் போதும்....
என ரஜினியின் நடிப்பை சொல்லிக் கொண்டே போகலாம். 

கபாலி - ரஜினி ரசிகர்கள் கர்வமாக காலரைத் தூக்கிக் கொண்டு சொல்லலாம்... ரஜினி ரசிகன்டா

தனது திரையுலக வாழ்வில் மிக முக்கியமான கட்டத்தில் கதை மற்றும் மக்கள் ரசனையை நம்பி படங்களை தேர்ந்தெடுத்து ஜெயித்தும் காட்டியிருக்கிறார் ( 2005ல் சந்திரமுகி.. 11 வருடங்களுக்குப் பிறகு கபாலி)

ரஜினியை மீண்டும் நடிக்க வைத்த பா.ரஞ்சித்திற்கு வாழ்த்துக்கள் & நன்றி. சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும் கதையோடு ஒட்டி வருகிறது. பின்னனி இசையும் அருமை.

Vlaardingenல் நான் சொன்னது - பாஸ், சந்திரமுகி படம் முடிஞ்சு வந்த போது பல ரசிகர்கள் நினைத்தது இதே போலத்தான்.. ஆனால், சந்திரமுகியை ரசிகர்கள் அல்லாதோரும் கொண்டாடினார்கள்... 
கபாலி  இன்னுமொரு சந்திரமுகியாக மாறும்.
Saturday, 12 December 2015

பிறந்தநாள் வாழ்த்துக்கள், தலைவா !!எனக்கு முதன்முதலில் ரஜினிகாந்த் என்ற பெயரால்தான் அறிமுகமானார்...
முரட்டுக்காளைனு ஒரு படம் போகலாம் என்று வீட்டினில் பேசிக் கொண்டிருந்தார்கள்.. மதுரை கே.புதூரில் வசித்து வந்த அரை டவுசர் காலம்.
1982 என்று நினைக்கிறேன்.. செகண்ட் ரிலீஸாக இருந்திருக்கும் போல! ரஜினிகாந்த் படமாம்.... ட்ரெயின் ஃபைட்டு சூப்பராம். கிட்டத்தட்ட இதே வார்த்தைகள்தான் நினைவில் உள்ளது.
ரஜினிகாந்த் என்ற பெயர் எப்போது பரிச்சயமானது என்று கேட்டால்.. இந்த நிகழ்வுதான் நினைவிற்கு வரும்.

பின்னர் ரஜினிகாந்த் என்ற பெயர் ரஜினியாக மாறியது. ரஜினி படம்ன்னா போதுமே.. சரியான ரஜினி பைத்தியம் என்ற லெவலுக்கு என்னை குடும்பத்தினர் கூறும் அளவிற்கு மாற்றியிருந்தது. 11/ 12 வயதினில் ரஜினியின் புகைப்படங்களைத் தேடியெடுத்து.. ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி
“ரஜினியில்லையென்றால் விஜய் இல்லை.. விஜய் இல்லையென்றாலும் ரஜினி உண்டு” எனக் கவிதையெல்லாம்[!!!] எழுதி வீட்டினில டவ்சரைக் கழட்டி வெளுத்ததும், யாரென்றே தெரியாத தூரத்து சொந்தக்காரர் ஒருவர் என்னிடம் “ நீயாப்பா ரஜினியில்லையன்றால்.. அப்டீனு எழுதியிருந்தே” என்று கேட்கும் அளவுக்கு பிரபலமாக இருந்த காலம்”.

ரஜினி என்ற பெயர் மெதுவாக “தலைவர்” என்று எப்போது மாறியது என்பது நினைவினில் இல்லை!

 லண்டன் வந்தப் பிறகு தலைவரின் படங்களைப் அதிகளவில் பார்க்கத் தொடங்கினேன். படையப்பா ஒரிஜினில வீடியோ 60/70 தடவைக்கு மேல் பார்த்தது, பாபா, அருணாச்சலம் என்று பல படங்கள் repeat modeல் பார்த்தௌ லண்டன் வந்த பின்புதான்.

சிலருக்கு கிண்டலாகத் தோன்றும்...
1.  ஆனால், இங்கே வந்தப் பிறகு “ ரஜினி”யை ரொம்ப “மிஸ்” செய்கிறார்ப் போல் ஒரு ஃபீலீங்.

2. 1999ம் வருடம் - மும்பை- சிறு விபத்தினில் தெறித்த பல்லை "புடுங்கி" யே ஆகவேண்டும் என்ற நிலை. வலிக்குமா டாக்ட்டர் எனக் கேட்டதற்கு "அஃப்கோர்ஸ்" என்று கூலாக சொல்லிவிட்டார். ஒரு வாரமாக நடுங்கிக் கொண்டிருந்தேன்.... அப்போது டிவியில் "ரஜினி ஜெயிச்சுட்டான்" என ரஜினி 25 promoவைப் பார்த்த நொடியில் ... இருந்த பயம் அத்தனையும் போன இடம் தெரியவில்லை.

இப்போது சென்னை வெள்ளக்காடாக இருக்கும் போதும்  ஓட்டுப் போட்ட அரசியல் கட்சிகளைக் கேட்காமல்.. ரஜினியை நோக்கியே அம்புகள் பாய்வது ஒன்று போதும் "தலைவரின்" வீச்சு என்றும் மாறாதது என்பதனை நிரூபிக்க.

மாற்றம் மட்டுமல்ல ரஜினியின் புகழும்
மாறாதது

Monday, 16 February 2015

பிச்சைக்காரர்கள்

சிங்காரவேலன் பட விநியோகத்திற்கு புதியவர் என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறந்த சதி வலை பின்னப்பட்ட நாடகத்தை அற்புதமாக நடத்திக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் சொல்லி வருவது ஒரே ஒரு விஷயத்தைத்தான் .... இது லிங்கா என்ற படத்தை அழிக்கும் வேலை இல்லை. ரஜினி என்ற பிம்பத்தை ( The brand - Rajinikanth) அழிக்கும் முயற்சி.       தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல 97% வெற்றிப் படங்களை தந்துள்ளவர் ரஜினி. வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை நடிகர்களும் கனவிலாவது ரஜினியின் இடத்தை அடைந்து விடமுடியுமா என்ற ஆவல் மேலிட காத்துள்ளனர்2016 - ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்போது என்ற நீண்டகால கேள்விக்கான பதிலாக இருக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த சமயத்தில் பிச்சைக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர். முதல் பிச்சையை இடுபவர் ஓட்டுப் பிச்சை கேட்கும் ஒரு அரசியல்வியாதியாம். அரசியல்வியாதிக்கு இதில் என்ன தொடர்பு? இதே சிங்காரவேலன் ப்ரஸ் க்ளப்பில் கூட்டிய பிரஸ்மீட்டில் சொன்னது, பதிவு செய்யப்பட்ட அந்த ஆடியோவில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் சொன்னது இதோ "தேர்தலின் போதெல்லாம்.. இதுதான் எனது கடைசித் தேர்தல் என்று கலைஞர் சொல்வார்; ஓட்டுக்கள் விழும். அது போல ரஜினியும் ஏதாவது சொல்லி இருக்க வேண்டும்".
அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்த பத்திரிகைகளில் ஒரு பத்திரிகை கூட இவர் திரு. கருணாநிதி குறித்து சொன்னதை பிரசுரிக்கவில்லை. இவர்களையெல்லாம் அடத்தூ என்று காறி உமிழ்ந்து எச்சிலுக்கு கூட மதிப்பில்லாமல் செய்யக்கூடாது.

ஆரம்பம் முதல் சிங்காரவேலனின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான் “ ரஜினி என்ன தேசிய தலைவரா?, ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது” என்பதில் தொடங்கி அவர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரஜினியின் புகழுக்கு சேதாரம் வராததால் இப்போது “ரஜினி சார், ஒத்துக்குங்க உங்களுக்கு மார்க்கெட் குறைஞ்சிடுச்சு, ரஜினி படம் வாங்கினால் பிச்சைதான் எடுக்க வேண்டும், மொத்தமே 40 லட்சம் பேர்தான் படத்தைப் பார்த்தார்கள்” என்பதில் வந்து நிற்கிறது.

வேந்தர் மூவிஸில் சொன்னோம் பதில் இல்லை என்று சொல்பவர்கள்.. அவர்களின் அலுவலகம் முன்பாக பிச்சை எடுத்துத் தொலைக்க வேண்டியதுதானே!!?? ரஜினி என்ற பெயரை இழுத்தால் கிடைக்கும் விளம்பரம் அதன் மூலம் ரஜினிக்கு இழுக்கைத் தேடி அவரை நிரந்தரமாக்க முடக்கும் திட்டம். ரஜினியின் இமேஜைக் சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள். அது என்ன பீங்கானா இல்லை கண்ணாடியா ?

சரி, ரஜினி, அவரது ரசிகர்கள் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்... தமிழ்நாட்டு பணத்தை கொள்ளையடித்து கர்நாடகாவிற்கு செல்கிறார்கள் என்று மிகக் கேவலமான அதே சமயம் ஆபத்தான ஒரு பொய்யைச் சொன்னாரே!! அதன் பின் விளைவுகளை யோசித்துப் பார்க்கவே நடுங்குகிறது.
இதெல்லாம் இவர்கள் பணம் குடுத்து பட உரிமையை வாங்கிய போது தோன்றவில்லையா....இவர்களை மிருகத்துடன் கூட ஒப்பிட முடியாது.


பிச்சை போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு; வாழ்விற்கும் பிச்சை எடுப்பதே தொழிலாக மாறட்டும்.... ததாஸ்து. அதிலாவது நஷ்டம் என்று புலம்பாமல் இருந்தால் சரி!

இவ்ளோ வருஷமா சிக்னல் வரலைனு சொல்லி கொண்டு இருந்த தலைவருக்கு மேலிருந்து 3G, 4G என்றெல்லாம் படு ஸ்ட்ராங்காக சிக்னல் வரத் தொடங்கியாச்சு என்றேத் தோன்றுகிறது

Wednesday, 1 January 2014

ஹேப்பீய்ய்ய்ய்ய் ந்நுயயயயயர்ர்ர்ர்ர்

சென்னை தரமணியில் உள்ள கேட்டரிங் காலேஜில் சேர்ந்த புதிது. New yearன் போது மதுரைக்கு சென்றாயிற்று. அப்போதெல்லாம் எங்களது அப்பார்ட்மெண்ட்டில் நண்பர்களோடு சேர்ந்து 31ம் தேதியன்று கோல்ச்சா காம்ப்ளெக்ஸில் உள்ள S & M பேக்கரியில் ஒரு கேக் ஆர்டர் செய்து மொட்டை மாடியில் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு பின்னர் அந்த HIG colonyல் ஒரு ஊர்வலம் போய் "ஹேப்பீய்ய்ய்ய்ய் ந்நுயயயயயர்ர்ர்ர்ர்" என்று சவுண்ட் விட்டு வருவது எங்களது தொன்று தொட்டு வந்த ஒரு சம்பிரதாயம். அந்த வருடமும் இதே போல செய்து விடலாம் என்று கலெக்‌ஷன் ஆரம்பிக்கும் சமயத்தில் செந்தில் என்றொரு (நல்லவன்) நண்பன் "டேய் மாப்ள, நீதான் இப்ப கேட்டரிங் படிக்கறல்ல எதுக்குடா கேக் வாங்கிக்கிட்டு?? நீயே செய்யேண்டா என்று ஆரம்பித்தான். அட, கற்ற வித்தையை நானும் எப்போதுதான் ப்ராக்டீஸ் செய்வது என்று எனக்கும் தோன்றியது... இல்லடா, செஞ்சுடுவேன். ஆனால் வீட்ல முட்டையெல்லாம் யூஸ் செய்ய முடியாது.. அதான் ப்ராப்ளம். டேய்... விட்ரா. எங்க வீட்ல செஞ்சுக்கலாம்... என்னென்ன வேணும்னு ஒரு லிஸ்ட் மாத்திரம் போடு. எல்லாம் ரெடியாகும் சமயத்தில்தான் நினைவிற்கு வந்தது... "செந்திலு, oven இல்லீயேடா!!... என்மேல் அவ்வுளவு நம்பிக்கையாக இல்லை என் டவுசரை கழட்டும் எண்ண்மோ தெரியவில்லை... அட , எங்கம்மா இலுப்பச்சட்டில மண்ணைச் சூடாக்கி செய்வாங்க அது மாதிரி செஞ்சுடு என்பதைக் கேட்டு ர்ர்ர்ர்ர்ரெடியாகி விட்டேன். இரவு 7 மணிக்கு இலுப்பச்சட்டியில் மண்ணைக் கொட்டி அதற்கு மேல் ஒரு தட்டை வைத்து அதனுள் ஒரு ப்ரவுன் பேப்பரைப் போட்டுcake mixtureஐ ஊற்றிவிட்டு காத்திருக்க ஆரம்பித்தேன்..... இல்லை தோம். பக்கத்தில் அவனது அம்மாவும் ஓவர் எக்ஸைட்மெண்ட்டுடன் " ஏம்ப்பா எவ்வுளவு முட்டை போட்ட? சரி எல்லாத்தையும் மொத்தமா போட்டு அடிச்சியா?? என்று ஏகப்பட்ட கேள்விகள். வேறொன்றுமில்லை அப்போதைய காலகட்டத்தில் கண்ணுக்கும் சரி காதுக்கும் சரி எட்டிய தூரத்தில் கேட்டரிங் படிக்கப் போனது நான் ஒருத்தன் மட்டுமே! அதிலெல்லாம் போனா சிக்கன், மட்டன் எல்லாம் செய்யனுமே, சாப்பிடனுமே என்ற விசாரிப்புகளுக்கு பதில் சொல்லியதைப் பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம். நேரம் 8,9,10 என்று ஓடிக்கொண்டேயிருக்கிறது.கேக் வெந்த மாதிரி தெரியவில்லை. செந்திலுக்கோ இன்னிக்கு நேரத்துக்கு கேக் வெட்ட முடியுமா என்ற டென்ஷன், அவன் அம்மாவிற்கோ 3 மணி நேரமாக gas onலேயெ இருக்கே என்ற கவலை. எனக்கோ எப்படிடா இதை சமாளிப்பது ?என்று யோசனை!. 11.30 - சரி ஆனது ஆகட்டும் , எடுத்து விடுவோம் என்று எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு கிளம்பினோம் 12 மணி.......ஓ!!! என்ற கூச்சலுடன், கேக்கை வெட்...டினால் நடுவில் வேகவேயில்லை.... ரொம்ப மோசமாகவெல்லாம் இல்லை... கொஞ்சமே கொஞ்சம் மட்டும் வெந்திருந்தது (காக்கைக்கும்.....) கேக்கை திருப்பிப் போட்டுப் பார்த்தால் "அங்கவை சங்கவை" கலரில் இருந்தது. ஆனால் மேற்பரப்பில் கலர் சூப்பராக இருந்தது. :)))) ஒரு வழியாக அதனை சுரண்டி சுரண்டி அனைவரும் உண்டு களித்துவிட்டு உலாவுக்குச் சென்று வந்தோம் . செந்திலு, அன்னிக்கு சொன்னதையேத்தான் இப்பவும் சொல்றேன் ... " உங்க வீட்டு gas அடுப்பு சரியில்லடா. அது மட்டும் சரியா இருந்திருந்திச்சு... கேக்கு சூப்பரா வந்துருக்கும்

Monday, 16 September 2013

முதுகில் இருக்கும் அழுக்கு....

நான் இந்தியாவைக் குறை கூற வேண்டுமென்று சொல்லவில்லை.... ஆனால் NDTV முதற்கொண்டு ஏதோ அமெரிக்கர்கள் எல்லோருமே Racist என்ற அர்த்தத்தில் வசை மாறி பொழிகின்றனர். London/ UKலேயும் இந்தப் பிரச்சினை உண்டு. இன்னும் சொல்லப் போனால் "பஞ்சம் பிழைக்க" போகும் எல்லோரும் ஏதேனும் ஒரு விதத்தில் சந்திப்பதுதான். அதற்க்காக இதனை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உண்மை நிலை இதுதான். UKயில் ஒரு Chain of Restaurantல் Managerஆக இருக்கும் நண்பன் சொன்னது " ஏரியா மேனேஜர்ஸ் மீட்டிங்ல என்னையும் சேர்த்து 2 பேர்தான் கலர் ஆளுங்க". மற்றொரு நண்பனுக்குத் திறமையிருந்தும் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல்... காரணம் அதே கலர்தான். அட அத விடுங்க என்கிட்ட இவிங்க அடிக்காத நக்கலா??? சொல்லத்தான் செய்வார்கள்... இதனை யாராலும் தடுக்கவோ, நிப்பாட்டவோ முடியாது!
அந்த ஊர்லேயே பிறந்து,வளர்ந்து இன்று சாதித்திருக்கும் பெண்ணை வாழ்த்துவோர் ஆயிரம் பேர் இருந்தால் 100 பேர் குதர்க்கமாக பேசத்தான் செய்வார்கள்! அதனைத் தவறு என்று கூக்குரலிடும் இந்திய மீடியா இந்தியாவில் நடக்கும் அவலங்களை நோக்கி தனது கவனத்தைத் திருப்பட்டும். எது sensationalலோ அதை மட்டும் பிடித்துக் கொண்டு அலைய வேண்டாம்
ஒரே நாடு என்று நாம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவில்தான் " ஒரு ஸ்டேட்க்காரன் தண்ணீத் தரமாட்டேங்கறான், இன்னொருத்தன் Dam கட்டித்தான் தீருவேன் அடம் புடிக்கிறான்... நியாயத்தைக் கேட்டால் அடிக்கிறானுங்க.... இதுல இல்லாத Racismஆ ??" இந்தியாவில் நிகழும் "ரேசிஸம்" இதனை விட பல ம�டங்கு அதிகம். மலையாளத்தான், மதராஸி, நார்த் இந்தியன், பாம்பேக்காரன், கடுவாலி..... எல்லாத்துக்கும் மேலாக "கன்னடத்துக்காரன்" :))). மதுரைல நைஜீரீயாவைச் சேர்ந்த சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள் . அவர்கள் இருந்த அப்பார்ட்மெண்ட் எப்படி அடையாளப்படுத்தப்பட்டது தெரியுமா?? - கருப்பனுங்க இருக்கானுங்களே அந்த ஃப்ளாட் என்றுதான். தமிழ்ப் படங்களில் வராத நம்பள்கி, நிம்பள்கி, சேட் சொல்றான், செய்றான் வகையறா வசனங்கள் Racism ஆகாதா ??? மும்பையில் தமிழர்கள், உ.பியைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்டது Racism இல்லையா?, என்ன ஒன்னு... அவிங்க இந்த மாதிரி அழகிப் போட்டில மட்டும்தான் சேத்துக்குவாய்ங்க..... நம்மாளுங்க பிரதமர் பதவியை நீங்க ஏத்துக்கிட்டே ஆகனும்னு ஒத்தக்கால்ல நிப்பாய்ங்க !

Sunday, 25 August 2013

O2வில் இசையராஜா

Londonல் உள்ள O2 Arenaவில் "ராஜா the ராஜா" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களை விட நான் அதிக டென்ஷனாக இருந்தேன்!! லீவ் எடுக்க முடியுமா ? என்ற கவலை எனக்கு! ஒரு வழியாக போவது என்றும் முடிவாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் டமாரமடித்து விட்டுப் போய்ச் சேர்ந்தபோது மணி மாலை 5.30. 6மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி 6.32க்கு ராஜாவின் " ஜனனி ஜனனி"யுடன் தொடங்கி ஓம் ஷிவோஹம், ஒளியிலே தெரிவது, அன்னக்கிளி உன்னத் தேடுதே, அம்மா என்றழைக்காத, மாஞ்சோலைக் கிளிதானோ, பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி, இளையநிலா, ராசாவே உன்ன நான் எண்ணித்தான், ராஜா ராஜாதி ராஜன், ஒரு ராகம் பாடலோடு, அந்தி மழை பொழிகிறது, காற்றில் எந்தன் கீதம், ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, செண்பகமே செண்பகமே, ஆலப் போல் வேலப் போல், ஒரு கிளி உருகுது,ஆயிரம் மலர்கல்ளே, தோளின் மேலே பாரமில்லை, அடி ஆத்தாடி, கொடியிலே மல்லிகப்பூ , பொன்மேனி உருகுதே, செந்தூரப் பூவே, ஒன்ன விட இந்த உலகத்தில், மாங்குயிலே பூங்குயிலே, ஏதோ நினைவுகள், சித்திரை செவ்வானம்,என் இனிய பொன் நிலாவே, இஞ்சி இடுப்பழகா, நான் தேடும் செவ்வந்திப்பூவிது, அழகு மலராட(மினி வெர்ஷன் கோரஸ்),ஆனந்தத் தேன்காற்று (மினி வெர்ஷன் கோரஸ்),சாய்ந்து சாய்ந்து, சொர்கமே என்றாலும், காசு மேல காசு வந்து, ஓரம்போ ஓரம்போ, சங்கீத ஜாதி முல்லை, கண்மணி அன்போடு, தென்பாண்டிச் சீமையிலே" வில் முடிந்தது. The O2 Arenaவில் அவ்வுளவு தமிழ் முகங்களைப் பார்த்த பொழுது... ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி! அதுவும் கையில் ராஜா The ராஜா ஷோவின் டிக்கெட் வேறு!! ஒரு வாரத்திற்க்கு முன்பிருந்தே Facebook ஓவர் பில்ட்டப் வேறு கொடுத்துக் கொண்டிருந்தேன். அவ்வுளவு பெரிய அரங்கினில் உள்ள செக்யூரிட்டியிடம் சென்று "எச்சூஸ்மீ, Where is Gate No: H? I'm here to attend Mr. Illayaraajaa's concert" என்று வம்படியாக கேட்டதை இன்று நினைத்தால் "இதுதான் ரியல் நான்" என்ற உண்மை புரிகிறது :) அடுத்ததாக "க்யூவில்" நின்று கொண்டிருந்த சமயம் பள்ளி நாட்களில் "பணக்காரன், தர்மதுரை"க்காக இதே போல "க்யூவில்" சந்தோஷ பதைபதைப்புடன் நின்ற நாட்கள் நினைவிற்க்கு வந்து "ரஜினியும்- ராஜாவும்" எந்தளவு என்னை ஆட்கொண்டுள்ளார்கள் என்ற உண்மை 10000001வது தடவையாக உறைத்தது :) கூட்டதிலிருந்து ராஜா ராஜா என்று சில ரசிகர்கள் கூப்பிட்டுக் கொண்டேயிருக்க எனக்கோ பயம் "No Discipline, program cancelled என்று மனுஷன் போய்விட்டால் என்ன செய்வது!! அதை அப்படியே பக்கத்து இருக்கைக்காரர் சொல்லியே விட்டார்! ராஜாவின் இசைக்கு ரசிகர்கள் அனைவரும் பெரும்பாலான சமயத்தில் ஒரே மாதிரிதான் யோசிப்போம் போல! SPB - இளைய நிலா பாடலை இந்தியில் காப்பியடித்து "Neele Neele Ambar pe" என்று பல்லவியை மட்டும் வைத்துக் கொண்டார்கள். சரணத்தையும், BGMம் அவர்கள் தொடவில்லை... ஏனென்றால் அவ்வுளவு கடினமான கம்போஸிஷன். இந்த பாடலில் வரும் இசை 1979ம் ஆண்டிற்க்கான இசை அல்ல... 2020ன் இசை. அந்தி மழை பொழிகிறது பாடலில் வரும் "ஆலாபனை" (சரியான வார்த்தைப் பிரயோகம் எனக்குத் தெரியவில்லை) ராஜாவின் குருவினுடைய குரல். அந்தப் பாடலில் வரும் குறிப்பிட்ட இசைப் பகுதி Ghazal இசைக்கு இணையானது. இவ்வுளவு திறமை கொண்ட ராஜா மனிதனேயில்லை ... ஒரு ராக்‌ஷசன் என்று சொன்னவுடன் இளையராஜா "நான் சரஸ்வதியின் புதல்வன்" கூட்டத்தினரை நோக்கி "சரஸ்வதியின் புதல்வன் ராக்‌ஷசனாக இருக்க முடியுமா ?? என்று கேட்க ... செம ரகளை. விடுங்க ராஜா சார்..... சின்னக் குழந்தையை "திருட்டுப் பயலே" என்று கொஞ்சுவதில்லையா??? :) ராஜா இப்பாடலைப் பற்றி கூறும் பொழுது "நான் இப்பாடலுக்கு ட்யூனாக இதனை வாசித்துக் காட்டினேன்... கமலுக்கும், இயக்குனருக்கும் முழுத் திருப்தி ஏற்படாமல் போக 32 ட்யூனகள் அமைத்தேன்... அதன் பிறகு அவர்கள் இருவரும் முதலில் போட்டா ட்யூனே இருக்கட்டும் என்றார்கள் சங்கீத ஜாதி முல்லை பாடலை அவ்வுளவு எனர்ஜடிக்காக மனுஷன் பாடும் போது ஒருவேளை ரெக்கார்ட் செஞ்சு வச்சுக்கிட்டு மேடையில் சும்மா வாயசைக்கிறாரோனு ஒரு டவுட் வந்தே விட்டது!!! பின் வரிசையில் இருந்த ஒரு லேடி "பாலு ஐ லவ் யூ" என்று கத்தியதை நானும் ரிப்பீட்டலாமா என்ற ஆசையை அடக்கிக் கொண்டேன். Karthick - ஒவ்வொரு பாடல் முடிந்தவுடனேயே அடுத்த பாடலுக்கான பாடகர்கள் ; ரிலே ரேஸ் வீரர்களைப் போல விரைவாக வந்து கொண்டிருந்தனர். என் இனிய பொன் நிலாவே பாடலைப் பாடவேண்டிய கார்த்திக் 1-1.5 நிமிடங்கள் தாமதித்து விட்டார். விரைவாக வந்த அவரைப் பார்த்து ராஜா - இவங்களை எல்லாம் காத்திருக்க வைக்கலாமா? ஹ்ம்ம்ம்ம் .... பெரிய ஸ்டார் ஆயிட்ட என்று கலாய்க்க ... கார்த்திக் ஹி ஹிஹி.... என்று வழிய வேண்டியிருந்தது. ராஜா மீண்டும் கார்த்திக்கை நோக்கி "கார்த்திக், நீ எந்த வருஷம் பிறந்த? கார்த்திக் - 1980 ராஜா - 1980ல நான் கம்போஸ் செஞ்ச பாடலை இப்ப இவர் பாடுவார்... என்று சொல்லி முடிக்கும் முன்னரே க்ளாப்ஸ் அள்ளியது Chinmayi - சின்மயிடம் வந்த பாடல்கள் அனைத்தும் அருமை. அன்னக்கிளி ஒன்னத் தேடுது, காற்றில் எந்தன் கீதம், கொடியிலே , இஞ்சி இடுப்பழகா . அன்னக்கிளி பாடலின் முடிவில் 3 முறை அன்னக்கிளி ஒன்னத் தேடுதே என்று முடிக்க வேண்டும்... ஆனால் இவர் 2 தடவையிலேயே முடித்து விட்டு கிளம்ப... ராஜா விடவில்லை :) மீண்டும் சின்மயியை 2வது சரணத்திலிருந்து பாட வைத்தார். சின்மயி அதற்கு "ராஜா சார் இசையில் படங்களில்தான் பாடும் பாக்கியமில்லை... மேடையில் எத்தனை முறை வேண்டுமானாலும் பாடத் தயார் என்று சமாளிக்க ; ராஜாவின் பதில்- அதற்க்காக மீண்டும் மீண்டும் தவறாக பாடலாகது :))) அதே போல் இன்சி இடுப்பழகாவில் "வெறும் காத்துதான் சார் வருது " என்று கமலைப் பார்த்து அவர் சொல்ல, அதற்க்கு கமலின் பதில் - நல்ல காத்தோட்டமா இருக்குமே... ராஜாவோ காத்தாவது வருதே என்று சொன்னதாக நினைவு பார்வையாளர்கள் கவனிக்கவில்லை என்று அவர் விடுவதில்லை. ஒரு தேர்ந்த ஆசிரியரின் அக்கறையும், கனிவானக் கண்டிப்பையையும் உணர முடிந்தது. அடி ஆத்தாடியில் அவர் செய்த தவறை அவரே சொன்ன பிறகுதான் ஓ அப்டியா என்று கேட்கத் தோன்றியது. ராஜா அதற்கு சொன்ன காரணம் - இந்தப் பாடலின் ரிகர்சலின் போது நான் சரியா கலந்துக்க முடியலை.... யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். அதே போல "ஏதோ நினைவுகள்" பாடலில் சற்றே உச்சஸ்தாயில் பாடிய மது பாலகிருஷ்ணனுக்கும் ஒரு கரெக்‌ஷன் செஷன் நடந்தது :) கோரஸ் பாடுபவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் அவவுளவு நேர்த்தியாக அவர்களது பணியினைச் செய்தனர். குறிப்பாக ஓரம்போ ஓரம்போ பாடல்! சொர்க்கமே என்றாலும் பாடலை தற்போதைய சூழலுக்கு ஏற்ப அவர் மாற்றி பாடியதை கூட்டம் வெகுவாக ரசித்தது. கோஹினூர் வைரம் பற்றியும் ஒரு "பஞ்ச்" தென்பாண்டிச்சீமையிலேவிலும் அவர் வார்த்தை ஜாலம் நிகழ்த்தினார். அப்பாடல் முடிந்தவுடன் "எத்தனையோ பாடல்களை உங்களுக்காக நாங்கள் தயார் செய்து வந்திருந்தாலும் இப்பாடலோடு இந்நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. வணக்கம் என்று அவர் சொன்னவுடன் தான் மணியைப் பார்க்கத் தோன்றியது... இரவு 11.12 !! ஒரு தேர்ந்த இசைக்கலைஞராக மட்டுமன்றி, பாடல்கள் சரியான முறையில் பரிமாறப்படுகிறதா என்ற கவனிக்கும் ராஜா the ராஜாதான்

Sunday, 21 April 2013

விபூதி


1984ம் வருடத்து டெல்லி நிகழ்வை மீண்டும் கிளற நீதிமன்றம் சொன்னதைக் கேட்டவுடன் தோன்றிய ஃப்ளாஷ்பேக் மதுரை அண்ணாநகர் YWCAவில் (4ஆம்/5ஆம் வகுப்பு என்று நினைக்கிறேன்)படித்துக் கொண்டிருந்தசமயம் அது. பிற்பகல் அறிவிப்பு வந்தது இந்திராகாந்தியை சுட்டுட்டாங்களாம்...எல்லோரும் வீட்டுக்குப் போங்க. தங்கையையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவிலைத் தாண்டி கோல்ச்சா காம்ப்ளெக்ஸ் பின்புறம் ஒரு சிறிய பெட்டிக் கடை ஒன்று இருந்தது.. தாத்தா கடை என்றழைப்போம். அந்தக் கடையை நெருங்கிய சமயம் ஒரு கும்பல் "செம சலம்பலோடு" ரோட்டில் வந்தது. நாங்களும், மற்ற சிறுவர்களும் அந்தக் கடையை ஒட்டி இருந்த தாத்தா வீட்டில் நுழைந்து விட்டோம். இப்பொழுது அதை நினைத்துப் பார்த்தாலே மலைப்பாக உள்ளது. செல்ஃபோன் கிடையாது, அம்மா-அப்பா அலுவலகத்தில் உள்ளார்கள் நாங்கள் இருவரும் வீட்டிற்கு பாதி நாளிலேயே திரும்புவது தெரியாது, எங்கள் வீட்டில் அப்போது land lineம் கிடையாது. யாரும் யாருடனும் இப்போது போல "டக்"கென தகவல் பரிமாறிக் கொள்ள முடியாது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். MGR அவர்களுக்கு இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி சொல்லப்படவில்லை ஏனெனில் அவரது உடல்நிலை அப்போது மோசமாக இருந்தது என்றெல்லாம் செய்திகள் வந்ததாக நியாபகம். 1991ல் கோடை விடுமுறையில் Hyderabad சென்றிருந்தேன். மே 22 சென்னைத் திரும்ப டிக்கெட்டும் எடுத்தாயிற்று. 22ம் தேதி காலையில் பால் வாங்கச் சென்ற சித்தப்பா பதட்டத்துடன் வீடு வந்தார்.. "ராஜீவ்காந்தியை கொன்னுட்டாங்களாம் Deccan Chronicleல் போட்ருக்கு என்றார். ஊர் முழுக்க பதட்டம். நான் அன்று ஊருக்கு கிளம்புவதா இல்லை டிக்கெட்டை கேன்சல் செய்வதா என்று குழப்பம். ரயில்கள் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படவில்லை. சித்தப்பாவுடன் ரயில் நிலயத்திற்கே சென்றுப் பார்த்து விடலாம் என்று கிளம்பினோம். வழக்கம் போல நெற்றியில் விபூதி இட எத்தனித்தேன். அப்போது சித்தப்பாவின் குரல் "டேய்.. விபூதிய பாத்தா தமிழ்நாடுனு கண்டுபிடிச்சிருவாய்ங்க, டெல்லியில் 1984ல் நடந்தது போல இப்ப நம்மளுக்கும் நடக்கலாம், அதனால அப்டியே வா" என்றார்